கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் இறுக்கமான பிடியிலிருந்த
தமிழக அரசியல் களம், அந்தப் பிடியிலிருந்து விடுபட்டிருக்கிறது. இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தான் வளர்வதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சியின்
அகில இந்தியத் தலைமை நிராகரித்துள்ளது. அதே சமயம், பா.ஜ.க.வின் அகில இந்தியத்
தலைமை, தமிழக அரசியலில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறது. தலைமையின்
விருப்பத்தை நிறைவேற்றுகிற நிலையில் தமிழக பா.ஜ.க. இருக்கிறதா?
தமிழகத்தில் காங்கிரஸ் செயல்படும் விதத்திற்கும், பா.ஜ.க. செயல்படும்
விதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் அடையாளம்
கோஷ்டிச் சண்டை. பா.ஜ.க.வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ‘தமிழிசைதான் மாநிலத்
தலைவர்’ என்கிறார்கள். ஆனால் பத்து, இருபது பேர் அவரை விடத் தாங்களே பெரிய
தலைவர் என்று காட்டிக் கொள்கிறார்கள். ஒரே பிரச்னைக்கு வெவ்வேறு கருத்துக்களை
ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள். இவர்களது முரண்பட்ட கருத்துக்களே முக்கியச்
செய்திகள் ஆகின்றன. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்களைக் கூட, முகம்
சுளிக்க வைக்கும் வீர வசனங்களைப் பேசுகிறார்கள்.
சில உதிரிக் கட்சித் தலைவர்கள், ‘யார் தமிழர்’ என்று சான்றிதழ் தந்து
கொண்டிருப்பது போல், பா.ஜ.க.வின் இந்தத் தலைவர்கள் போகிற போக்கில் ‘தேச
விரோதி’ என்ற பட்டத்தையும், ‘தீவிரவாதி’ என்கிற பட்டத்தையும் வினியோகித்துக்
கொண்டே போகிறார்கள். தேர்தல் அரசியலில், தலைவர்கள் பேசுகிற பேச்சுக்களில்
கவனம் இருக்க வேண்டியது அவசியமானது. யாரை எதிர்த்து அரசியல் செய்கிறோம் என்பது
முக்கியமானது. எந்தப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்துகிறோம் என்பது அதைவிட
முக்கியமானது. எழுப்புகிற பிரச்னைகளில் முன்வைக்கிற வாதங்களின் வலிமை, தெளிவு
ஆகியவை அடிப்படையானவை.
ஆனால், தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் இந்த அம்சங்கள் எவற்றிலும் அக்கறை
காட்டுவதே இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளுக்கு எதிராக தாக்குதல்
அரசியல்தான் இன்றையத் தேவை. ஆனால், மத்திய அரசுக்கு எதிராகத் தனி நபர்களும்,
சிறிய குழுக்களும் நடத்தும் தாக்குதல்களை எதிர் கொள்ளும், தற்காப்பு
அரசியலில்தான் இவர்களின் அக்கறை இருக்கிறது. யாரை எதிர்க்கிறோம் என்பதில்
காட்டுகிற அக்கறையைப் போலவே, யாரைப் புறக்கணிக்கிறோம் என்பதும், என்ன
பேசுகிறோம் என்பதும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் தேர்தல் அரசியலின் பால
பாடங்கள். பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்
என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
ஹிந்துக்களை ஒரு அணியாகத் திரட்டி தேசாபிமானத்தைப் போதிக்கிற வேலையை
ஆர்.எஸ்.எஸ். செய்து கொண்டிருக்கிறது. ஹிந்துக்களுக்கும்
சிறுபான்மையினருக்கும் இடையிலான மோதலில், ஹிந்துக்களின் தரப்பைப் பற்றிப் பேச
ஹிந்து முன்னணி இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இரண்டுமே பா.ஜ.க.வின் வேலை
அல்ல. தேர்தல் அரசியல்தான் அதன் நோக்கம். தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதன்
மூலம், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையையும், பாதுகாப்பையும்
மேம்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் இலக்காகச் சொல்லப்படுகிறது. இந்த வேறுபாடுகளை
உணராதவரை, நடைமுறைப்படுத்தாத வரை பா.ஜ.க. தனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள
முடியாது.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருப்பவர்கள், ஹிந்து முன்னணியில் இருப்பவர்கள் பா.ஜ.க.வில்
இருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வில் இருக்க விரும்பும் எல்லோரும்
ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. இதுதான் அகில இந்திய
அளவில் எல்லா மாநிலங்களிலும் இருக்கும் நடைமுறை. இந்த நடைமுறையால்தான் பா.ஜ.க.
தனது அரசியல் வெற்றிகளைத் தொடர்ந்து பெற்று வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் முக்கியப் பொறுப்பு வகித்த ராம் மாதவ் தான், ஜம்மு –
காஷ்மீரில் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும்
இடையிலான கூட்டணி ஆட்சியின் உந்துசக்தியாக இருக்கிறார். கோவாவில் – தீவிர
ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட மனோகர் பரிக்கர்தான், கிறிஸ்தவ சர்ச்களின்
இணக்கமான உறவோடு பா.ஜ.க. ஆட்சி அமைய அங்கு வழி வகுத்தார். உத்திரப் பிரதேச
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைந்திருக்கிறது. வெற்றி
பெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் காங்கிரஸ்,
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்
அல்ல.
ஆனால், அந்த ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின்
நோக்கத்திற்காக, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.
தனது இலக்கில் கவனமாக இருக்கிறது. அதேபோல், பா.ஜ.க.வின் அகில இந்தியத்
தலைமையும் தனது குறிக்கோளில் தெளிவாக இருக்கிறது. தலைமையின் குறிக்கோளை
வெற்றியடையச் செய்கிற அக்கறை தமிழக பா.ஜ.க.வுக்குத் தேவை.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி அமைந்ததை, தமிழக
பா.ஜ.க.வினர் பெருமையாக உணர்கிறார்கள். ‘தங்களது அரசு அமைந்து விட்டது’ என்கிற
கொண்டாட்ட மனநிலையிலிருந்து இவர்கள் இன்னமும் வெளியே வரவில்லை. இந்தப்
பெருமையும் கொண்டாட்டமும் தவறல்ல. ஆனால், மோடி அரசு அமைந்ததில் தங்களின் பங்கு
என்ன என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். அது பூஜ்ஜியமே என்ற உண்மை
இவர்களுக்குத் தெரிய வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.
தலைமையில் அமைந்த கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அந்தக்
கூட்டணி அமைந்ததும் கூட, அகில இந்தியத் தலைமையின் முயற்சியால்தான் என்பதையும்,
நரேந்திர மோடி என்கிற தனி மனிதனின் மீது உண்டான நம்பிக்கையும்தான் என்பதை,
தமிழக பா.ஜ.க.வினர் உணர வேண்டும்.
டெலிவிஷன் சேனல்கள் நடத்தும் விவாதங்களில் கலந்து கொண்டு காரசாரமாகப் பேசுவதன்
மூலம் கட்சியை வளர்த்து விட முடியும், அல்லது வளர்த்து விட்டதாகக் காட்ட
முடியும் என்று நினைத்தால், அதை விடப் பெரிய ஏமாற்று எதுவும் இருக்க முடியாது.
தமிழில் ஆறேழு செய்திச் சேனல்கள் வந்து விட்டன. செய்திகளில் ஆர்வம் குறைந்த
இந்த மாநிலத்திற்கு இந்த எண்ணிக்கை மிக அதிகமே. அதனால், தங்களது சேனலைப்
பார்க்க வைக்கும் முயற்சியில் சேனல்கள் கடுமையாகப் போட்டியிடுகின்றன.
தங்களது சேனல் கவனிக்கப்பட வேண்டும் என்றால், விபரீதமான சர்ச்சைகளை உருவாக்க
வேண்டும். இதற்காக விரிக்கப்பட்ட வலையில், விரும்பிப் போய் விழுகிற இரைகளாகவே
பா.ஜ.க. பிரமுகர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க.வை ‘உயர் ஜாதியினரின் கட்சி’
என்றும், மோடி அரசை ‘முதலாளிகளின் அரசு’ என்றும் சித்தரிக்கும் தீர்மானத்துடன்
நடக்கும் அந்த விவாதங்களில், தங்களைத் தற்காத்துக் கொள்வதே பா.ஜ.க.
பிரமுகர்களின் நோக்கமாக இருக்கிறது. ஒரு வகையில், பா.ஜ.க.வினரே இம்மாதிரியான
விவாதங்களுக்கு அங்கீகாரமளிக்கிறார்கள்.
கட்சியின் வளர்ச்சி என்பது, அதன் கட்டமைப்பின் பலத்தில் இருக்கிறது.
கட்டமைப்பின் சக்தியாக இருக்கிற தொண்டர்களுக்குத் ‘தலைவன்’ என்கிற உந்து சக்தி
தேவையாக இருக்கிறது. தொடர் தோல்விகளிலும் கூட தி.மு.க. வின் உந்து சக்தியாகக்
கருணாநிதி திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகும் அ.தி.மு.க.வைப்
பலமான கட்சியாக வைத்திருக்கும் உந்து சக்தியாக ஜெயலலிதா இருந்தார்.
பா.ஜ.க.வின் உந்து சக்தி என்பது மோடிதான். 2014-க்கு முன்பு தமிழ்நாட்டில்
பா.ஜ.க. வில் நிலவிய தொய்வு ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால், 2014-க்குப்
பிறகும் அக்கட்சியில் தொடரும் தேக்க நிலைக்கு, தமிழக வாக்காளர்களைக் காரணமாகக்
கூற முடியாது.
– வசந்தன் பெருமாள், Thuglak




