பிக்பாஸில் தெறித்த அரசியல்: அனிதாவுக்காகப் பொங்கிய கமலஹாசன்!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம்

சென்னை:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் நெடி அடிக்கும் விதமாக, சமூகக் கருத்துகளைக் கூறுவதாக கமல் அனிதா தற்கொலை விவகாரம் குறித்துப் பேசினார். அனிதாவைப்போல் தற்கொலை சோகங்கள் நடக்காமல் தடுக்க எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படும் என்று பிக்பாஸ் நாட்டின் பிரதமர் போல் அவர் பேசியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நடிகர் கமலஹாசன் தனியார் டிவியில் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றதால், மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில், நீட் தேர்வை தடை செய்யுங்கள் என்று கூறி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து, உருக்கமான கருத்துக்களை வெளியிட்டார்.

அதில் அவர் பேசியதாவது:- “சில கேள்விகள் விடைகாண வேண்டி நமக்காகக் காத்து இருக்கின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் உண்டு. இனி இந்தக் கேள்விக்கு விடையே இல்லை என்று மனம் தளர்பவர்கள் நம் பிள்ளை அனிதாவைப்போல் தன்னையே மாய்த்துக் கொள்வார்கள். இந்த தலைக்குனிவு இனி நமக்கு நிகழக்கூடாது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

ஓலமிட்டு அழுதல் நமக்கு மனம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆவன செய்வோம். இனி இது நிகழாமல் பார்ப்போம் என்று செயல்படுவதுதான் நமக்கு மூளையும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் செயலாகும். இதற்கு மருந்து என்ன என்று என்னைக் கேட்டால் பள்ளிப்படிப்பை முடிக்காதவன் நான். செய்யும் ஆர்வம் இருக்கிறது. ஆற்றல் இருக்கிறதா? என்று கேட்டால் அது இருப்பவர்கள் சொல்லட்டும்.

நாம் செவி சாய்ப்போம். நான் செவி சாய்க்கிறேன். யாரோ ஒருவர் செவி சாய்க்க மறந்ததால்தானே நம் தலை சாய்கிறது வெட்கத்தில் நின்று. அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இது நமது எல்லோரது வீட்டிலும் நடந்த சோகம். இருந்தாலும் அதை மறந்து இனி அதுபோன்ற சோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் தருணம் இது.

நீங்கள் யோசித்து சொல்லுங்கள் என்று என்னை கேட்காதீர்கள். நாம் யோசிப்போம். போராட வேண்டியது வந்தால் போராடுவோம். அது இன்றைக்கு, உடனே, இங்கே, இந்த மேடையில் நடக்காது. ஏனென்றால் அது எதிர்கால திட்டம். நாம் தீட்ட வேண்டிய திட்டம்.” என்று பேசினார்.

இதனிடையே, அனிதாவின் இறுதிச் சடங்குக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் கேரளாவுக்குச் சென்று முதல்வர் பிணரயி விஜயனுடன் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பாடம் கற்க வந்ததாகக் கூறி கம்யூனிஸ வேடம் போட்ட கமலஹாசன் உடனே பிக்பாஸ் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். படப்பிடிப்பு இடைவெளியில் அவர் அனிதா வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்த நேரம் கிடைக்கவில்லையா? ஏன் இந்த நாடகம் என்று சமூக வலைத்தளங்களில் கமலஹாஸனை கடித்துக் குதறுகிறார்கள் நெட்டிசன்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.