நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவனை மீட்டு ஆலோசனையும்
அறிவுரையும் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் படமூடி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்
நேற்று முன்தினம் தனது தந்தையின் செல்போனை வாங்கி அதில் இன்டர்நெட் மூலம்
புளூவேல் அப்ளிகேசனை டவுண்லோடு செய்து, அதனை செல்போனில் இன்ஸ்டால் செய்து
புளூவேல் கேம் விளையாட ஆரம்பித்தான்.
முதலில் ஆர்வமாக விளையாடத் தொடங்கிய அவன், பின்னர் விளையாட்டில் தீவிரமாக
மூழ்கினான்.
இதனால் அதில் இருந்து அவனால் மீண்டு வரமுடியவில்லை. அதன் கட்டளைக்கு ஏற்ப
செயல்பட தொடங்கினான்.
ஆரம்பத்தில் வீட்டில் கூர்மையான பிளேடு இருக்கிறதா? என அவனிடம் கேள்வி
எழுப்பினார்கள்.
அதற்கு அம்மாணவன் ஆம் என்று பதில் அளித்தான்.
இதையடுத்து அந்த பிளேடை பயன்படுத்தி கையில் நீல திமிங்கலத்தை வரையுமாறு
உத்தரவிட்டனர்.
பின்னர் அந்த உத்தரவுக்கு ஏற்ப மாணவன் பிளேடை எடுத்து வந்து தனது கையை கீறி
நீல திமிங்கலம் உருவத்தை வரைந்தான்.
அப்போது அவனது தந்தை அங்கு வந்தார். மகன் புளூவேல் விளையாட்டில் மூழ்கி
இருப்பதை கண்டதும், அவனது கையில் இருந்து செல்போனை வாங்கி கொண்டார். ஆனால்
அவர் தனது மகன் கையில் நீல திமிங்கலம் உருவத்தை வரைந்து இருப்பதை
பார்க்கவில்லை.
பின்னர் நேற்று காலையில் மாணவன் பள்ளிக்கு சென்றான். அப்போது அவனது கையில்
இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சி
அடைந்தனர்.
உடனே பள்ளியில் வைத்து அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள்
பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவனது பெற்றோருக்கு இது பற்றி தெரிவித்து ஆலோசனையும் அறிவுரையும்
கூறினார்கள்.




