விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்க கூடாது

சற்றுமுன்

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த
முடிவும் எடுக்க கூடாது: தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு

சென்னை;

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின்
அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக்கூடாது என அரசுக்கு சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட
விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2017 ஜூன் 22-ம்
தேதி தமிழக அரசு இரு அரசாணைகளைப் பிறப்பித்துள்ளது. இந்த 2 அரசாணைகளையும்
ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் விபிஆர் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ஏற்கெனவே 1999-ல் விதிமீறல் கட்டிடங்களை
வரன்முறைப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்,
ஒருமுறை மட்டும் இந்த அனுமதியை வழங்கலாம் என்ற அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் தற்போது ஏராளமான விதிமீறிய கட்டிடங்கள்
முளைத்து விட்டன. மேலும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், 2007-ம்
ஆண்டுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்
படவில்லை. விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களைச் சிறிது இடைவெளியில் தொடர்ச்சியாக
வரன்முறை செய்துகொண்டே இருந்தால் பொதுமக்களும் விதிகளை மீறி சட்டவிரோதக்
கட்டிடங்களை கட்டிக்கொண்டே தான் இருப்பர். இந்த வரன்முறை உத்தரவு சட்டவிரோத
செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்குமேயன்றி, தடை செய்யாது. எனவே விதிமீறிய
கட்டிடங்களை வரன்முறை செய்ய தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட
அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை
நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர்
அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் விபிஆர்.மேனன் ஆஜராகி ‘விதிமீறல்
கட்டிடங்களை அடையாளம் கண்டு அவற்றை முறையாக அளந்து வரன்முறைப்படுத்த உயர்மட்ட
பன்னோக்கு சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என
வாதிட்டார். விசாரணை தள்ளிவைப்பு இதையடுத்து நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 23-ம் தேதிக்கு
தள்ளி வைத்தனர். அதுவரை விதிமீறிய கட்டிடங்களை வரன்முறைப்படுத்த
பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறலாம் எனவும், ஆனால் உயர் நீதிமன்றத்தின்
அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக்கூடாது எனவும் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.