
தமிழகத்தில் பொது போக்குவரத்து இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு காலத்தில் சில மண்டலங்களை தவிர்த்து பொது போக்குவரத்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு 12 மணிவரை நீடிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் சில மண்டலங்களை தவிர்த்து பொதுப் போக்குவரத்து செப்டம்பர் 1 முதல் இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, மாவட்டங்களை பொதுப் போக்குவரத்துக்கு எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மண்டலத்திற்கு உள்ளே பொதுப் போக்குவரத்து இயக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. தனியார் வாகனங்களில் பயணிக்க விரும்புவர்கள் வழக்கம்போல் இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும். அதேபோல், வெளிமாநிலங்கள் சென்று வரவும், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் முறையை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.