கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள செங்கல்படுகை பகுதியைச் சேர்ந்த விவசாயி முகமது ஜாபர் அலி. அவர், தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டுள்ளார். மேலும், தனது தோட்டத்தில் 6 பசுமாடுகள் மற்றும் ஒரு காளை மாட்டை அவர் வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் தினசரி மேய்ச்சலுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்றதில், ஒரு பசுமாடு மட்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, ஜாபர் அலி நண்பர்களின் உதவியுடன் அந்த பசு மாட்டை பல்வேறு பகுதிகளில் தேடினார்.
அப்போது, கல்லாறு பகுதியில் பலத்த காயங்களுடன் அந்த பசு நின்று கொண்டிருந்ததை அவர்கள் கண்டுள்ளனர்.
காட்டுப் பன்றிக்கு வைக்கப்படும் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு படுகாயமடைந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஜாபர் அலி வனத்துறைக்கு புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வனத்துறை சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி வெடித்ததில் மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்துள்ளது. பார்ப்பதற்கே மிகவும் சோகமாக இருந்தது.
ஆனால், அந்த நிலையிலும் காயமடைந்த பசு, தன்னுடைய கன்றுக்கு பால் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், காயமடைந்த பசு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. பசுவின் மரணம் ஜாபர் அலி குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பன்றிக்கு அவுட்டுக்காய் வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, யானைகள், மாடுகள் அவுட்டுக்காயால் உயிரிழந்துள்ளன. தற்போது, உயிரிழந்த மாடும் காப்புக்காட்டுக்கு 2 கி.மீ தொலைவில்தான் அவுட்டுக்காய் உண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவே பசுவுக்கு பதிலாக யானைக்கு இந்த நிலை நேர்ந்திருந்தால், மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டிருக்கும். ஆனால், இறந்தது பசு என்பதால் விஷயம் பெரிதாகவில்லை.
அவுட்டுக்காய் வைத்து, பசுவின் மரணத்துக்கு காரணமானவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள அவுட்டுக்காய்களை அகற்றுவதுடன், இனி அந்தப் பகுதியில் அவுட்டுக்காய் வைப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்” என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.