சென்னை:
18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் அறிவித்தார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி துரைசாமி அறிவித்தார். அதன்படி இன்று 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.
தினகரன் தரப்பில் ஆஜரான துஷ்யந்த் தவே, தாங்கள் கட்சி தாவல் தடை சட்டத்தை மீறவில்லை; தமிழக அரசில் ஊழல் மலிந்து விட்டதால் முதலமைச்சர் மீதான ஆதரவை திரும்பப் பெற்றோம். சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. பதவிக் காலம் முடிய 4 ஆண்டுகள் உள்ள நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை சரியானதில்லை. சபாநாயகர் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று வாதிட்டார்.
மேலும், பிப்ரவரியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு வாக்களித்தோம். எம்.எல்.ஏக்கள் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது, அது தொடர்பாக எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கிற்கும் பொருந்தும். தற்போதைய அரசியல் சூழ்நிலை தில்லியில் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
“மாநில அரசியலில், மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. சபாநாயகர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அடிப்படை உறுப்பினராக நீடிக்கும் பட்சத்தில் கொறடா உத்தரவால் எங்களை எப்படி நீக்க முடியும். தமிழக அரசை சிலர் தில்லியில் இருந்து இயக்குகிறார்கள். முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும். தகுதி நீக்கம் தொடர்பான ஆவணங்களை எங்களிடம் அளிக்கவில்லை. காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கமால் இருக்க உத்தரவு தேவை. தகுதி நீக்கம் நேரில் தரப்படவில்லை. இனையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், “வழக்கிற்கு தேவையில்லாத வாதம் முன் வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் மத்திய அரசை குறைகூறக் கூடாது. சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டனத்துக்குரியது. அரசு, சபாநாயகர் மீது குற்றசாட்டுகளை வைப்பதால் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை. பதில் அளிக்க 10 நாட்கள் கால அவகாசம் தேவை. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது. பெரும்பான்மையை நிரூபிக்க போடப் பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம்” என வாதிட்டார்.
பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தத் தகவலும் இல்லை என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது.
பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரிய வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என உத்தரவிட்டப்பட்டது. வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று கூறிய நீதிமன்றம், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



