தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்ரீ இராமகோபாலன் ஜி அமரர் ஆனார் என்ற துயரச்செய்தி மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பிரகாசமான அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. அன்னாரது வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றிய எண்ணற்ற தொண்டர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ இராமகோபாலன்ஜியின் போற்றத்தக்க செயல்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்.அவர் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதலும், சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்துவதிலும் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர். தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான தொண்டு என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது ஆத்மா சத்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.ஓம் சாந்தி
- மோகன் பகவத் (பூஜனீய சர்சங்கசாலக்)
பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் செய்தி:
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரும், மூத்த ஆன்மிகவாதியுமான பெரியவர் இராமகோபாலன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்து மதம் மீதும், அதன் நம்பிக்கைகள் மீதும் பற்று கொண்ட இராம கோபாலன் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவற்றை பரப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். அவர் கொண்ட கொள்கைகளில் சமரசமின்றி செயல்பட்டு வந்தவர்.
ஆன்மிகவாதி பெரியவர் இராம கோபாலனை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி"
இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் திரு. ராம கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், பெரியவர் திரு. ராம கோபாலன் அவர்களும், நல்ல நண்பர்களே! அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன். இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை.
ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



