கொரோனாவுக்கு மருந்து என்று சொன்ன சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
thanikachalam ratna sidha medical doctor
thanikachalam ratna sidha medical doctor

குரோனா வைரஸ் தொற்று நோய் பரவிய தொடக்க காலத்தில் தாம் அதற்கு மருந்து கண்டு பிடித்து வைத்திருப்பதாக சமூக தளங்களில் தகவல் பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலத்தை  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா  தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக சித்த மருத்துவர் தணிகாச்சலம் வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்டிருந்தார்.

இதை அடுத்து அவர் மீது, தொற்று நோய் பரவல் காலத்தில் தவறான தகவல்களை பரப்புதல் தொடர்பாக  வழக்கு பதிவு செய்த  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்த நிலையில் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையின் போது,   இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தனர்.  மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறைகளையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்

தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. தணிகாச்சலம் ஏற்கெனவே அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்றுவிட்ட நிலையில் தற்போது அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.