தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று உட்புற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும், நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று அதிகாலை முதலே மாநிலத்தின் பல இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்யாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் 18 மி.மீ., மழையும், சோழவரம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் 14 மி.மீ., மழையும், செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 19.4 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் வழக்கமாக பெரும் மழைப்பொழிவு இருக்கும். அதன்படி, சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயபுரம், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், காவனூர், பொத்தேரி ஆகிய பகுதிகளில் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருகிறது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம்; பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று, மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
குமரி முதல் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் வரை, வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், பரவலாக மழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம்.
உள் மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யலாம்.நாளை பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். தென் மாவட்டங்களில், நாளை இடி, மின்னலுடன், சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.