
லக்ஷ்மி விலாஸ் வங்கி கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், திருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லட்சுமி விலாஸ் வங்கியின் மீது ஏற்கெனவே பலமுறை ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப் பட்டிருந்தன. பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனமான இந்தியா புல்ஸ் என்ற நிறுவனம் வாங்கும்போது பல்வேறு புகார்கள் எழுந்தன.
தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதித்துறை, வங்கி இயக்க தடை விதித்துள்ளது. இந்த வங்கியின் சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது. ஒருவருக்கே பல கணக்குகள் இருந்தால் மொத்தம் சேர்த்து ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும்.
லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள், பணமுறிவுகள் போன்றவற்றுக்குப் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது… என்று தகவல் வெளியானது.
லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் வர்த்தக இயக்கத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், DBS வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடை இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ரேன்பாக்ஸி நிறுவனத்துக்கு வழங்கிய ரூ.720 கோடி கடன் திரும்ப வராததை அடுத்து சிக்கலில் மாட்டியது லக்ஷ்மி விலாஸ் வங்கி.
இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ.25,000 க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று, லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.
தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு விலை பங்குச் சந்தையில் 20% சரிவு கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லக்ஷ்மி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
லக்ஷ்மி விலாஸ் வங்கி தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கி. ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில், தி லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலைமை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து அதன் நிகர மதிப்பைக் குறைத்து வருவதால் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.