
நான் ஏ டீம்… ஏ1 டீம்! என்று கூறியுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது ஒன்றே என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது பி டீம் என்பது குறித்த சர்ச்சைகள் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ரஜினி காந்த் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து, அதில் திமுக., ரத்தம் இழையோடிய அர்ஜுனமூர்த்தி இணைந்ததில் இருந்து, பி டீம் என்ற வாசகங்கள் அதிகம் எதிரொலிக்கத் தொடங்கின.
ஆனால், பாஜக.,வில் இருந்ததால் பாஜக.,வினரால் அர்ஜுன மூர்த்தி ரஜினியின் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும், ரஜினியின் கட்சி பாஜக.,வின் பி டீம் என்றும் திமுக.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதேநேரம், சிறிது காலம் பாஜக.,வுக்குள் திமுக.,வினர் மீதான ஊழல் வழக்குகளை மட்டுப் படுத்துவதற்காக ‘பவர் பாலிடிக்ஸ்’ செய்ய அனுப்பி வைக்கப் பட்ட அர்ஜுனமூர்த்தி, தற்போது அங்கிருந்து ரஜினியின் கட்சிக்கு திமுக., தலைமையால் அனுப்பி வைக்கப் பட்டுள்ளார் என்ற விமர்சனங்களும் தலை தூக்கியுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசனும் தன் பங்குக்கு பி டீம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து கமல் வெளியிட்ட ட்வீட்:
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.