ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயரும். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்று தெரிகிறது. போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தும் இந்த நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் மசோதா நிறைவேற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



