கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை மாற்ற விவகாரத்தில் காங்கிரஸ் ஜோதிமணி எம்பி அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதால் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலையை வைத்துள்ளனர். இதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்று காங். எம்.பி. ஜோதிமணி அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் இந்த விவகாரம் குறித்து கூறிய போது…
காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலை வரலாற்று பின்னணி உள்ள சிலை. அதை மாவட்ட நிர்வாகம் அகற்றியது தவறான செயல். மேலும் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் வருகிறார். அவர் திறந்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவசர கதியில் இரவோடு இரவாக தரமற்ற வலுவில்லாத நிலையில், சட்ட விரோதமாக கட்டடம் அமைத்து அதன்மீது காந்தி சிலை வைத்துள்ளனர்.
இந்த சிலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? மக்களவை உறுப்பினராகிய நான் ஆகிய நான் இதை ஏற்க முடியாது. இந்த சிலை வைக்க கடந்த 12ம் தேதி ஒரே நாளில் நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டு, வழக்கறிஞர் கருத்துரு மற்றும் தடையின்மை சான்று பெற்று அதே நாளில் வேலை தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை தொடர்ந்து கரூர் நெசவாளர் மற்றும் பனியன் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முறையான டெண்டர் விடப்படாமல், எந்த நிதியில் எந்த துறை இந்த வேலையை செய்கின்றனர் என்ற எந்த விவரமும் இல்லாமல் ரகசியமாக பணி செய்து வருகின்றனர். அரசு பணி ஆணை கிடைக்கும் வரை இந்த வேலையை செய்யக் கூடாது என வேலை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்…!
மேலும், தரமற்ற முறையில் அவசரகதியில் வைக்கப்பட்டுள்ள இந்த காந்தி சிலையை நாளை கரூர் வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க மாட்டார் என நம்புகிறோம். அப்படி மீறி திறந்து வைத்தால் கரூர் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நானே நேரடியாக நின்று முதல்வரிடம் கேள்வி கேட்பேன் என்றார்.
காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மருத்தனர். மேலும், ஜோதிமணி உள்பட 50க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்!
இதனிடையே, காந்தி சிலையை அவமதித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் காந்தி சிலை விவகாரத்தில் ஜோதிமணி காந்தி சிலையை அவமதிக்கும் வகையில் காந்தி சிலையின் பீடத்தை குச்சி வைத்து குத்தி எடுத்து உள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்?! அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.