
மணல் அள்ளுவது குறித்து தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியின் பேச்சு – 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு
கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் பேசிய கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த நொடியே, மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் இங்கே பதவியில் இருக்க முடியாது” என்று பேசினார்.
அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மணல் கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் பேசுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவில், ‘தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்’ என்று பதிவிட்டார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, ‘உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது தவறில்லை. அது காலம் காலமாக நடைமுறையில் உள்ள விஷயம்தான். 15,000 மாட்டு வண்டி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதமாகத் தீர்ப்பு வந்தது.
அரசும், `காவிரியில் 5 இடங்களில் உள்ளூர் தேவைக்காக மணல் அள்ள இடம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால், இதுவரை இடங்களைத் தேர்வு செய்து, அறிவிக்கவில்லை’ என்று விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில், அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் கரூர் காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இன்று செந்தில் பாலாஜி மீது ஐபிசி ஐபிசி 153, 189, 505 ( 1 ) (b), 506 ( 1 ), 353, 511 ஆகிய 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.