தில்லியில் 20 வருடங்களுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அந்த ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் நிறைந்த ஆட்சி மீதான எதிர்ப்பை பாஜக தன் பக்கம் திருப்பிக் கொள்ள முடியவில்லை. கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே கெஜ்ரிவால் அதை கைப்பற்றிவிட்டார். இன்று தலைநகரை அழிவின் பாதாளத்துக்குக் கொண்டு சென்றாயிற்று.
தொழில் வளர்ச்சியை முடக்கிப் போட்ட கம்யூனிஸ ஆட்சி மேற்குவங்கத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. அவர்கள் மேலிருந்த அதிருப்தியையும் பாஜகவினால் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முடிந்திருக்கவில்லை. மம்தாவிடம் தோற்றுப் போனார்கள். இப்போது மம்தா தேச விரோதத்தின் புதிய அரக்கியாக உருவெடுத்திருக்கும் நிலையில் பாஜக பெறும் வெற்றி என்பது பெரிய சந்தோஷத்தைத் தரவில்லை. டில்லியில் எப்படி காங்கிரஸ் தனது பி டீமான கெஜ்ரி மூலம் அழிவுச் செயலைத் தொடர்ந்துவருகிறதோ அதே போல் மம்தா மூலம் வங்காளத்தில் தொடர்ந்துவருகிறது.
மஹாராஷ்டிராவில் பாஜக தோற்றதென்பது மிக மிக கேவலமானது மட்டுமல்ல அபாயகரமானதாக மாறிவருகிறது. தாக்கரேவைக் கொண்டே காங்கிரஸ் தனது அழிவு வேலைகளைத் தொடங்கியிருக்கிறதென்பது எதிரியின் தந்திரத்துக்கும் அராஜகத்துக்குமான துல்லியமான எடுத்துக்காட்டு.
கேரளாவில் கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் என இந்து விரோத சக்திகள் அம்மானை ஆடிவருகின்றன. இத்தனைக்கும் தெய்வத்தின் சொந்தபூமி என்று சொல்லத்தக்க மாநிலம் அது. அதில் இன்றும் இரட்டை இலக்க இடம் கூடப் பிடிக்கமுடியவில்லை.
கர்நாடகாவில் பத்து சீட் குறைவாகப் பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இப்போதைய ஆட்சி என்பது எதிரிகள் விட்டுக் கொடுத்ததால் வந்திருக்கிறது.
தமிழகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பிரிவினைவாதம் பேசியே இயங்கிவரும் இயக்கங்களின் செல்வாக்கில் இருக்கும் மாநிலம். இதற்கு கோவில்களின் மாநிலம் என்றும் ஒரு பெயர் உண்டு. கருணாநிதி, ஜெயலலிதாவின் காலத்துக்குப் பின் முன்னிலைக்கு வந்திருக்கவேண்டிய பாஜக இன்றும் இரண்டு கழகங்களின் தயவை எதிர்பார்த்து நிற்கும் துர்பாக்கியமான நிலையே நிலவுகிறது. மம்தாபோல் காட்டாட்சியை திமுக அவிழ்த்துவிட்டு அடுத்த தேர்தலில் 70-80 இடங்களில் பாஜக ஜெயித்து முன்னிலை பெறுவதெல்லாம் பாம்பு தலையில் பனிக்கட்டியை வைத்து அனுப்பி அது உருகியபின் அடிக்கலாம் என்பது போன்ற மடத்தனமே.
உத்தரபிரதேசம் தொடங்கி பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனையே. ஆனால், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் இந்து உணர்வு எந்த அளவுக்கு பெருகியிருக்கிறதோ இந்து நலன் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறதோ அதைவிட பாஜக தோற்றுவிட்டிருக்கும் மாநிலங்களில் இந்து-இந்திய எதிர்ப்பும் அபாயமும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று நாம் சந்தோஷப்படுகிறோம். ஆனால், அவர்களின் தேச விரோத மத விரோதச் செயல்கள் முன்பைவிட மிகப் பெரிய அளவில் நடந்துவருகின்றன. அவர்கள் தோற்றாலும் அவர்களுடைய நச்சுக் கொள்கை தோற்கவில்லை.
வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் ஆகிய பிரச்னைக்குரிய இடங்களில் நமக்கு இப்போது கிடைத்திருக்கும் செல்வாக்கு என்பது திறந்து வைத்திருக்கும் கற்பூரம் போன்றது. அந்தப் பகுதிகளில் தேச விரோத இந்து விரோத சக்திகள் நினைத்தால் அரை நொடியில் அனைத்தையும் மாற்றிப்போட்டுவிடமுடியும்.
அந்த வகையில் நமது வெற்றிகள் நமக்குத் தந்திருக்கும் நன்மையைவிட தோல்விகள் தந்துவரும் வேதனைகள், அபாயங்கள் மிக மிக அதிகம். இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றியும் தோல்வியுமே இப்படியானவையே.
ஒரு நோயை நம்மால் எப்போது தீர்க்கமுடியுமென்றால் அது நமக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்போதுதான். நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என்று பொய்யாக, மெத்தனமாக நினைத்துக்கொண்டிருந்தால் நோய் முற்றிவிடும். அப்போது அலறியடித்துக்கொண்டு சிகிச்சையை ஆரம்பித்தால் பலன் இல்லாமலும் போய்விடக்கூடும்.
பத்தாண்டுகளுக்கு முன்பாகவே சிந்தித்திருக்கவேண்டிய விஷயங்கள்.
இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும்.
ஜி.எஸ்.டி., டிமானிடைசேஷன், டிஜிட்டலைசேஷன், தற்சார்பு பாரதம் என பொருளாதார சீர்திருத்தங்கள் ஒருபக்கம், அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீர் இணைப்பு, சர்வ தேச அளவிலான நல்லுறவு-நற்பெயர் என நடந்திருப்பவை எல்லாம் நிச்சயம் பெருமிதத்துக்குரியவையே.
இப்போதைய சீன வைரஸ் பேரிடரையும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பாகவே சமாளித்துவருகிறோம். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் தேசத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. ஆனால், மக்கள் மனங்களில் ஒரு கருமை படர்ந்துவருகிறது. அல்லது கரி மண்டிய மனங்களே செயலூக்கத்துடன் புகைகின்றன. ஒளியின் இதத்தைவிட இருளின் கொடுமை அதிகரித்துவருகிறது.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இந்தத் தேர்தல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்த்து இந்துக்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. நவீன உலகில் நிறம், இனம், மதம், ஜாதி, தேசம் சார்ந்த குழு மனப்பான்மைகள் இருக்கக்கூடாது. உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. மனிதர்கள் பாரம்பரிய குழு அடையாளங்களைத் துறந்து தனிநபராக, உலகளாவிய மனிதராக ஆகவேண்டும் என்று நவீன தாராளவாத முழக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால், பழங்கால அடையாளங்களில் நிறம், இனம், தேசம் சார்ந்த அடையாளங்கள் கைவிடப்பட்ட அளவுக்கு மத அடையாளங்கள் கைவிடப்படவில்லை. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தமது மத அடையாளத்தை முன்பைவிட அதி இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது மக்களில் பலர் அதை விட்டு விலகினாலும் அந்த மதங்களின் பொருளாதார, அரசியல், மத அதிகார மையங்கள் அதை மிகப் பெரிய ஆயுதமாக இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு கிறிஸ்தவர் பள்ளி அல்லது கல்லூரி நடத்தினால் கிறிஸ்தவ நலனுக்கே அவர் முன்னுரிமை தருவார். ஒரு இஸ்லாமியர் வணிக வளாகம் நட்த்தினால் இஸ்லாமிய மதிப்பீடுகளுக்கே முன்னுரிமை தருவார். அந்த மதங்களின் மதவாத சக்திகளைப் பொறுத்தவரையில் கேட்கவே வேண்டாம். அடி முதல் முடி வரை கிறிஸ்தவ வெறி மிகுந்தவர்களாகவே இருப்பார்கள்.
அரசியல் விழிப்பு உணர்வு பெற்றவர்கள் இப்படியென்றால் எளிய மக்களோ இன்னும் ஒரு படி மேலாக அந்த அரசியல் தலைமைகள் சொல்லும் விஷயத்துக்கு அதி விசுவாசமாக நடந்துகொள்கிறார்கள். தலையும் உடம்பும் ஒரே திசையைப் பார்த்தால் தான் ஒழுங்காக நடக்க முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொருபக்கம் திரும்பிக் கொண்டிருந்தால் நின்ற இடத்திலேயே இருக்கவேண்டியதுதான்.
கிறிஸ்தவர்களுக்கென்று தனி கட்சி எதுவும் இல்லை. இஸ்லாமியருக்கென்று இருப்பவை பெரிதும் பெயரளவிலான கட்சிகள் மாத்திரமே. ஆனால், மிகத் தெளிவாக எந்த கட்சி வென்றாலும் தமது நலன்களை வென்றெடுக்க அவர்களுக்குத் தெரியும். ஒரு இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் எந்தக் கட்சியில் இருந்தாலும் தமது மத நலனில் குறியாக இருப்பார்கள். நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இஸ்லாமிய, கிறிஸ்தவ நலன் சார்ந்து நடந்துகொள்ளும்படி மிரட்ட அவர்களால் முடியும்.
பள்ளிக்கூடப் பாடங்களில் இந்து தெய்வங்கள், புராணங்கள் பற்றிய பாடங்களை நீக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் அதைச் செய்ய முடியும். தமிழின் மகத்தான பாரம்பரியங்களை பெருமிதங்களை முற்றாக மறுதலித்தபடியே தாம் தான் தமிழர்கள் என்று வேடம் போட அவர்களால் முடியும்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்லாமிய கிறிஸ்தவ ஐகான்கள், மதிப்பீடுகள், விழாக்கள் இவற்றை மதித்தே ஆகவேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத கட்சியை இந்துக்கள் ஆதரிப்பார்கள். ஆனால், கிறிஸ்மஸுக்கு ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லாத கட்சியை கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் ஆதரிக்கவே மாட்டார்கள்.
திருநாள் வாழ்த்து என்பது ஒரு குறியீடு. மறைமுகமாக கிறிஸ்தவ இஸ்லாமிய ஆட்களுக்கு காண்ட்ராக்ட்கள், சலுகைகள், பதவிகள் என அனைத்தும் வெளிக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும். குழுவாக சிந்திப்பது, அரசியல் பொருளாதார தலைமைகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்வது எல்லாம் மிகவும் அடிப்படையான குணங்கள். நமது நலனுக்கு நாம் பாடுபடவேண்டும் என்பதைச் சொல்லியா தரவேண்டும்.
இந்துக்களில் இப்படியான இந்துத்துவ அரசியல் உணர்வு இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய ஜாதிப் பற்று. ஜாதி சார்ந்த பிரச்னைகளுக்கு அவர்கள் அணிதிரள்வதுபோல் இந்து மதம் என்ற பேரடையாளத்துக்கு அரசியல்ரீதியாக அணிதிரளுவதில்லை. குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த அணிதிரளல் நடப்பதில்லை.
கடந்த காலங்களில் வட இந்தியாவில் இருந்த இஸ்லாமிய அராஜக ஆட்சிகள் அந்தப் பகுதி மக்களிடையே இந்து என்ற அரசியல் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்தியாவில் இஸ்லாமிய கொடூரங்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால் இங்கு இந்து உணர்வு அரசியல்ரீதியாக இல்லை என்பதில் பெரிய உண்மை இருக்கிறது. ஆனால், வட இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்தது போல் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகிய பின்னர்தான் இந்துக்கள் விழித்துக்கொள்வோம் என்று இந்துக்கள் தூங்கிக் கொண்டிருந்தால் எழுந்து பார்க்கும்போது எல்லாம் முடிந்து போயிருக்கும்.
இந்துக்களுக்காகப் பேசும் கட்சிதான் ஜெயிக்க வேண்டும் என்றில்லை. ஜெயிக்கும் கட்சி எதுவானாலும் அதை இந்துக்காகப் பேச வைத்தால் போதும்.
- பி.ஆர்.மகாதேவன்