spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்அறநிலையத்துறை அமைச்சருக்கு... டாக்டர் க.கிருஷ்ணசாமி எழுதிய கடிதம்!

அறநிலையத்துறை அமைச்சருக்கு… டாக்டர் க.கிருஷ்ணசாமி எழுதிய கடிதம்!

- Advertisement -
krishnasamy dr
krishnasamy dr

பெறுநர்:

மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்கள்,
இந்து அறநிலையத் துறை அமைச்சர்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

அன்புடையீர், வணக்கம்!

பொருள் :
இந்து அறநிலையத்துறை கோவில்களின் அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் குறித்து கோவில் வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டி.

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தாங்கள் பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத் துறையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டமைக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழகத்தின் அடையாளங்களாகவும், பூர்வீக சின்னங்களாகவும் விளங்கக்கூடிய பிரசித்திப் பெற்ற இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,000-க்கும் மேற்பட்ட கோவில்களில் பல முறையான பராமரிப்பின்றி சுரண்டல் நிறுவனங்களாக மட்டுமே இருந்து வரும் அவல நிலையை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் வருமானங்கள் குறித்து இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள். அது மிகவும் வரவேற்க தகுந்த செய்தி ஆகும். இதுபோன்ற ஒரு கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே முன் வைத்தேன். மேலும், 06.05.2021 அன்று இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்திலும் வலியுறுத்தி உள்ளேன்.

ஏழை, எளிய விவசாய மக்களின் விளை நிலங்களை அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியிலிருந்தவர்களும், ஆன்மீக பற்றுக் கொண்டவர்களும் கோவில்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவற்றை எழுதி வைத்தனர். அதேபோல தமிழகம் தழுவி இந்து கோவில்களுக்கு இருக்கக்கூடிய விளை நிலங்கள் மட்டும் ஏறக்குறைய 5 ½ லட்சம் ஏக்கர் எனத் தகவல்கள் வருகின்றன. அதைப் போன்று கோவில்களின் உள்ளேயும், வெளியேயும் எண்ணற்ற வணிக வளாகங்கள் தோன்றியிருக்கின்றன. பல கல்விக் கூடங்களும், மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பல கோவில்கள் பெயரளவில் மட்டும் இந்து அறநிலையத்துறையின் கீழும், நடைமுறையில் சில தனியார் வசமும் உள்ளன. உதாரணத்திற்கு, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 135 கோவில்களின் வருமானங்கள் முழுமைக்கும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே செல்கிறது. தமிழக கோவில்களின் எண்ணற்ற சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டுள்ளன.

வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்களும், நிலங்களும் அற்ப சொற்ப மதிப்பிற்கு 99 வருடக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தெய்வங்களின் சிலைகளுக்கு சூட்டப்படும் தங்க, வெள்ளி ஆபரணங்களின் உண்மையான அளவும், மதிப்பும் தெரிவதில்லை. உண்டியல் எண்ணிக்கையில் வெளிப்படை தன்மை இல்லாமல் முறைகேடுகளும், பெரும் கொள்ளையும் நடைபெறுகின்றன. முக்கியமான விழாக் காலங்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணங்களுக்கு முறையான கணக்குகள் வைப்பதில்லை, கோவில்களின் பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய வகையில் கோவிலுக்குள்ளேயே வணிக நிறுவனங்கள் துவக்க அனுமதிக்கப்படுகிறது. மிக உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த கோவில் வளாகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையும், தரமற்ற போலியான பொருட்களையும் விற்கும் தலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வணிக நிறுவனங்களுக்கு வெளிப்படையாக ஒரு வாடகையும், மறைமுகமாகப் பன்மடங்கு கட்டணமும் வசூலித்துக் கொள்கிறார்கள். இத்தனை வருமானங்கள் இருந்தும், பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில், திருச்செந்தூர், பழனி, கோவை பேரூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் முறையாக சுகாதாரம் பேணப்படுவதில்லை, அங்குள்ள தெப்பக்குளங்கள் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகின்றன. தமிழ்நாட்டின் கலைக் களஞ்சியங்களாகவும், பூர்வீக சின்னங்களாகவும் விளங்கக்கூடிய இந்த கோவில்களை முறையாகப் பராமரிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.

எனவே,

1.இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் அனைத்தையும் எல்லாவிதமான தனியார் பிடிகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும்.

2.கோவில்களுக்கு சொந்தமான விளை நிலங்கள்; மனைகள்; வணிக, மருத்துவமனை, கல்வி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திரட்டப்பட வேண்டும்.

3.விளை நிலங்கள், வணிக கட்டிடங்களிலிருந்து வரக்கூடிய வருமானங்கள் குறித்தும், அவற்றை யாரெல்லாம் பல தலைமுறைகளாக அனுபவிக்கிறார்கள் என்ற தகவலும் வெளிக்கொணரப்பட வேண்டும்.

4.கோவில்களின் அழகையும், மாண்பையும், சுகாதாரத்தையும் கெடுக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் கோவிலின் உள்ளேயும், அருகாமையிருந்தும் அகற்றப்பட வேண்டும்.

5.களவு போன சிலைகள், பறிபோன அனைத்து கோவில் சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டும்.

6.கோவில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க பிரேத்யேக நீதிமன்றங்கள் அமைத்திட வேண்டும்.

7.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அபகரிப்பவர்களாக மாறி விடுகிறார்கள். எனவே, அனைத்து அதிகாரிகளின் நடவடிக்கைகளும் பல்வேறு விதமான கண்காணிப்புகளுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும்.

8.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

9.இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் விவசாய நிலங்களும், கட்டிடங்களும் தொடர்ந்து ஒருவரிடத்தில் இல்லா வண்ணம் சட்டம் கொண்டுவரப்பட்டு, சுழற்சி முறையில் அதில் அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.இந்து அறநிலையத்துறையின் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்பட்டாலே அதன் வருமானத்தைக் கொண்டு தமிழக அரசினுடைய நிதிநிலையை எவ்வித வரிவிதிப்புக்கள் இல்லாமல் ஈடுகட்டிக்கொள்ள முடியும். இதன் மூலம் தமிழக மக்களுடைய உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் கடைகளை கூட மூடி விட மூடியும்.

11.இயற்கையான மலை குன்றுகள் எங்கிருந்தாலும் அதை கோவில்களாக்கி சிலர் தங்களுக்கான வருமான ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிக் கொள்கின்றனர். எனவே இது போன்ற முறைகேடுகளையும் தடுத்திட வேண்டும்.

12.கோவில்களை வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தாலே அவை மிகப்பெரிய சுற்றுலாத்தலங்களாக மாறிவிடும்.

எனவே, இந்து அறநிலையத்துறையின் கோவில்களின் அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் அதன் வருமானம் குறித்து கோவில் வாரியாக வெள்ளை அறிக்கையாகவும், அதை இணையத்தில் வெளியிடவும், ஒவ்வொரு கோவிலிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி.
20.05.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe