சென்னை: பேரவை அவைக்காவலரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்றது. அப்போது, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான மோகன்ராஜ் பேசும்போது கூறிய வார்த்தையால், அவையில் பிரச்னை ஏற்பட்டது. அதை அடுத்து, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைத்தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவைக் காவலர் விஜயன் ஈடுபட்டபோது தாக்கப்பட்டார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரன், சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனையின் பேரில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, இருவரும் திங்கள், வெள்ளிக்கிழமையில் கோட்டை காவல் நிலையத்தில் காலை 10.30க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைப் படி, இருவரும் ஆஜராகி திங்கள் அன்றும், வெள்ளிக் கிழமையிலும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் தினகரன், சேகர் ஆகியோருக்கு எதிராக ஜார்ஜ் டவுண் 7-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி கோட்டை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகையின் நகலை நீதிமன்றத்தில் ஆஜராகி பெற்றுக்கொள்ள, இருவருக்கும் போலீஸார் சம்மன் தயார் செய்தனர். கோட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இருவரும் ஆஜரானபோது அந்த சம்மனை அவர்களிடம் போலீசார் கொடுத்தனர். ஆனால், அதனை அவர்கள் வாங்க மறுத்தனர். முறைப்படி அதை வீட்டில் வந்து கொடுக்கும்படி கூறிச் சென்றுவிட்டனர்..
அவைக்காவலரை தாக்கியதாக வழக்கு: தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Popular Categories



