இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதிகள்!

சற்றுமுன் தமிழகம்
poison
poison

திண்டுக்கல் அருகே கவனிக்க உறவினர்கள் இல்லாததால் மனமுடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அடுத்த கணவாய்பட்டியை சேர்ந்தவர் தொத்தன்(65). இவரது மனைவி வீராயி (60). இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு மலைக்கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

முதுமை காரணமாக இருவரும் அவதிப்பட்டு வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வீராயிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வீராயிக்கு நோய் குணமாக வில்லை.

மனைவி உடல்நிலை மோசமடைந்ததை உணர்ந்த தொத்தன், அவருடன் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

இதனையடுத்து, நேற்று தம்பதியினர் இருவரும் அரளி விதைகளை அரைத்து குடித்த நிலையில், வீராயி உடனடியாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது, தொத்தன் தாங்கள் இருவரும் அரளி விதைகளை சாப்பிட்டதை கூறி, காப்பாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறப்புக்கு பின் தங்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் என கூறிய தொத்தன், வீட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை இறுதிச்சடங்கு செலவுக்கு வைத்து கொள்ளுமாறு, அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து விட்டு உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.