
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனைக்காக ஆன்லைன் முன்பதிவு வசதி என்ற புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், அதேபோல வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை சான்றிதழ்கள் கண்டிப்பாக தேவை என்று சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைக்கான மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் வரை 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில், பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் கவுன்டர்களில் கூட்டம் அதிகரித்து நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனைக்காக வரும் பயணிகள் முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான க்யூஆர் கோடு சென்னை விமான நிலைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
அதில் முன்பதிவு செய்து கொண்ட பயணிகளுக்கு, நேரம் ஒதுக்கப்பட்டு விடும். அந்த நேரத்தில் பயணிகள் வந்து, வரிசையில் நிற்காமல் உடனடியாக பரிசோதனையை முடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டால் பயணிகள் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.