அகஸ்தீஸ்வரத்தில் கோவில் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள ராமன்புதூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் பலர் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளனர்.
கோவில் இருந்த நிலம் விற்க்கப்பட்ட போது, நில உரிமையாளர் மொத்தமுள்ள 71 சென்ட் நிலத்தில் மூன்று சென்ட் நிலம் மற்றும் அதிலுள்ள விக்ரகங்களை தவிர்த்து நிலம் விற்கப்படுவதாக ஆவணம் பதிவு மற்றொருவருக்கு விற்றுள்ளார்.
ஆனால் அந்த நிலம் மீண்டும் ஓரிருவர் கைமாறி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைசியாக அந்த 71 சென்ட் நிலத்தை மலையன்விளை பகுதியை சேர்ந்த நத்தானியேல் என்பவர் விலைக்கு வாங்கி உள்ளார்.
அந்த நிலத்தில் உள்ள கோயில் சிலைகளை நேற்று முன்தினம் நத்தானியேலும், அவருடன் ஒருசில குண்டர்களும் சென்று கடப்பாரை சுத்தியலை கொண்டு கோயில் சிலைகளை உடைத்து உள்ளனர்.
இதனையடுத்து கோவில் மற்றும் சிலைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக சந்திரசேகர் (30) என்பவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் நத்தானியேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று கோவில் இடிக்கப்பட்ட பகுதிக்கு பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜன் மற்றும் 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜன் கூறியதாவது; அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கு உள்ள பொதுமக்கள் வணங்கி வந்துள்ளனர். இந்த கோவிலை கிறிஸ்தவ மத வெறியர் ஒருவர் கோயிலையும், கோயில் சிலைகளையும் உடைத்து உள்ளார்.
அது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது .காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவோடு நிறுத்திக்கொள்ளாமல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க ஏற்பாடு வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அவர்களுக்காக குமரி மாவட்ட பாஜக துணை நின்று போராட்டத்தில் ஈடுபடும், இவ்வாறு அவர் கூறினார்.