இன்று மதியம் 11.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கே 80 கிலோமீட்டர் துரத்தில் மையம் கொண்டிருந்தது. அது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும்… என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், புயலைப் போன்ற மையக் கண் பகுதி இல்லை; கரையை கடக்கும் இடத்தை துல்லியமாக கணிக்க முடியாது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.
இன்று காலை 0830 மணி முதல் மதியம் 1330 வரை பதிவான மழையளவுகள் – சென்னை நுங்கம்பாக்கம் 60.0, MRC நகர் 60.5, தரமணி 59.0, மீனம்பாக்கம் 35.0, எண்ணூர் 43.0, தாம்பரம் 20.0
பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை எந்த விமானங்களும் தரை இறங்காது என அறிவிக்கப் பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் சேவையில் மாற்றம் இல்லை என்றும் விமான நிலைய நிர்வாகம் தெளிவாக்கியது.
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது…
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 100கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-45கி.மீ வேகத்தில் வீசும்.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 54% அதிகம் பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 77% அதிகமாக பொழிந்துள்ளது.. என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. சென்னையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. சென்னையில் முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.
பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப் பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
சென்னையில் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் 2ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று, சென்னை கமிஷனர் எச்சரிக்கை வெளியிட்டார்.
சென்னையில் மழை பெய்யும் இடங்கள்: தி.நகர், கோடம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் குடியுருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்லமுடியாத அவல நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வீடுகளினுள் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளது. அதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
தி.நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளில் சாலையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அசோக் நகர், அடையாறு, கொருக்குப்பேட்டையில் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. மழையால் சென்னை பெருநகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்படைந்தோருக்கு உதவி செய்வதற்காக மூன்று பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகராட்சி, ராட்சத மோட்டார் மூலமாக தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் நீர் தேக்கம் அப்படியே உள்ளது. இதுதவிர சென்னையின் ரெங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலூம் பல இடங்களில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
8 விமான சேவைகள் ரத்து: சென்னையில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்கள் என 8 விமான சேவைகள், இன்று(நவ,,11) மற்றும் நாளை(நவ.,12) தேதிகளில் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளிட்டுள்ளது.