
துன்பம் வரும் காலத்திலும் நம்முடனே இருப்பவர் தான் உண்மையான நண்பர்.
நட்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வீடியோ, தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கிரிக்கெட், புட்பால், ஹாக்கி போன்ற விளையாட்டுப் போட்டிகள் என்றாலே நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். டிவி, செல்போன் போன்றவற்றில் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது மிகுந்த ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் போட்டியை நாம் கண்டு ரசிப்போம்.
அதிலும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு நாம் நேரில் சென்று விட்டால், ஆரவாரக் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது.
ஆனால், ஃபுட்பால் போட்டி நடைபெறும் மைதானம் ஒன்றுக்கு நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்த போதிலும், அந்தப் போட்டியை முழுமையாக ரசிக்க முடியாத துரதிஷ்டம் உடையவராக இருந்தார் கர்லோஸ்.
இவருக்கு பார்வை தெரியாது என்பதே இதற்கு காரணமாகும். ஆனால் உண்மையான நண்பன் சீசர் கூடவே இருந்த காரணத்தால் அந்தக் கவலையும் தீர்ந்து போனது.
ஃபுட்பால் போட்டி லைவாக ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில், மைதானம் போன்ற அட்டை ஒன்றை டேபிளில் வைத்து, அதில் கர்லோசின் கரங்களை பற்றியவாறு, பந்து எந்த திசையை நோக்கி உதைக்கப்படுகிறது, எந்த அணி முன்னேறிச் செல்கிறது என்பது குறித்து விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார் சீசர்.
போட்டி நடைபெறுகின்ற அதே வேகத்தில் ஒவ்வொரு நகர்வு குறித்தும் தனது நண்பர் சீசரின் உதவியால் தெரிந்து கொண்டே வந்தார் கர்லோஸ்.
ஒரு சமயத்தில், தங்களுக்கு ஆதரவான அணி கோல் போட்டது குறித்து தெரிந்த உடன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார் கர்லோஸ். சீசரின் முயற்சியால் கர்லோஸின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
இந்த வீடியோவை 5.37 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். குறிப்பாக ஏராளமான நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்க விட்டனர்.
இந்த வீடியோவை காண்பவர் ஒவ்வொருவர் கண்களிலும் நீர் வழிந்து ஓடுகிறது. சீசரின் இந்த அற்புதமான முயற்சிக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “நான் இதை மிகவும் விரும்புகிறேன் நமக்கும் கூட சீசரை போன்ற நண்பர்கள் நிறைய தேவைப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மற்றொரு பதிவர், “அடடா என்ன ஆச்சர்யம், என்ன ஒரு உண்மையான நண்பர்” என்று கூறியுள்ளார். இவ்வுலகையும், இங்குள்ள நிகழ்வுகளையும் ரசிக்க கண்கள் கூட தேவைப்படாது போல. உண்மையான நண்பன் இருந்தாலே போதுமானது என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்வு.





