ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், இந்த கடத்தலில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா மற்றும் மகள் வீனா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பினராயி விஜயன் கூறியதாவது,
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து குற்றம் சாட்டுவது மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது வெறும் வீண் முயற்சி என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.





