அதிகரிக்கும் கொரோனாவால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றப்படவேண்டிய அவசியமில்லை.திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் 22 இடங்களில் கொரோனா அதிகமாக இருக்கும் கொரோனா கிளஸ்டர் உள்ளது. வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது.
வரும் ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்பட்டதும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
இருந்த போதிலும் எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. கொரோனா பரவல் சற்று அதிகரித்தாலும் பாதிப்பு 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது.
எனவே பள்ளிகளை திறப்பதில் பிரச்சினை இல்லை. பூஸ்டர் டோஸ் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ.388 மட்டுமே. அதற்கு மேல் விற்கக் கூடாது’ என்று அவர் தெரிவித்தார்.
