கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்புகளுடன் பள்ளிகளில் கால்பதித்தனர்.பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு, மே மாதம் தான் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. கீழ் வகுப்புகளை பொறுத்தவரையில் ஏப்ரல், மே மாதத்தில் தேர்வுகள் நடந்தாலும் மே மாதம் இறுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்பேரில், இன்று தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20-ந்தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்க உள்ளது.
இதையடுத்து, பள்ளிகளின் வளாகங்கள் அனைத்தும் தூய்மைப் பணி செய்யப்பட்டும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
அதன்படி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க, அனைத்து மாவட்டங்களிலும், பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பேரணி நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகள் கட்டண பிரச்னை காரணமாக அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் வருகின்றனர். உடனடியாக அந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர்.
கடந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குறைந்த கால அளவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க முடியாது என்பதால், பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.
அதனால் இந்த கல்வியாண்டில் முழுமையாக பாடங்களை படிக்க வசதியாக முன்கூட்டியே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பாடத்திட்டம் முழுமையாக இடம் பெற உள்ளது. ஆசிரியர்களுக்கும் பாடத்திட்டத்தை போதிக்க போதிய கால அவகாசம் கிடைக்கும். மேலும், அதிக அளவில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வருவதால், அரசுப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேலையின்றி இருக்கின்ற பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. மாணவர்களின் படிப்புக்கு தேவையான நோட்புக் பேனா பென்சில் இதர உபகரணங்கள் அனைத்தும் விலை அதிகரித்துள்ளது.
