தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.வேட்பாளர் இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ எனதேர்தல் கமிஷன் தரப்பில் வலியுருத்தப்பட்டுள்ளது.
ஒரு தேர்தலில் வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, 1996ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உருவானது.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதோடு, மக்கள் தீர்ப்புக்கும் மரியாதை இல்லாமல் போகிறது’ என, தேர்தல் ஆணையம் சார்பில் முறையிடப்பட்டது.எனவே, ‘ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்’ என, சட்ட திருத்தம் மேற்கொள்ள 2004ல் வலியுறுத்தப்பட்டது. இதில் தீர்வு எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷ்னர் ராஜிவ் குமார் சமீபத்தில் மத்திய சட்டத்துறை செயலரை சந்தித்தார். அப்போது, 2004ல் முன்மொழியப்பட்ட சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது என சட்ட திருத்தம் மேற்கொள்ள முடியாவிட்டால், இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் தரப்பில் கோரப்பட்டது.
