அதிமுக ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு..

Published:

அதிமுக பொதுக்குழு கூட இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் இன்று காலையில் எடப்பாடியை நேரில் சந்தித்து  அதிமுகவின் பல்வேறு அணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ் சொந்த மாவட்ட நிர்வாகிகளும் எடப்பாடியை நேரில் சந்தித்து ஆதரவு  தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து விவாதிக்க கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது, திடீரென ‘அதிமுகவை வழிநடத்தி செல்ல ஒற்றை தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி முன் வைத்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி ஆதரவாளர்கள் பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசி வருகின்றனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்களும் ஒற்றை தலைமை குறித்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். இதற்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இரட்டை தலைமையே நன்றாக இருக்கும் போது இப்போதைக்கு எதற்கு ஒற்றை தலைமை என்று அதிரடியாக பேட்டியளித்தார்.

பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுப்பதற்காக இது போன்ற பிரச்னைையை கிளப்பி வருகின்றனர் என்றும் கூறியிருந்தார். அப்படி ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வந்தால் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எனது கையெழுத்து தேவை. கையெழுத்து இல்லாமல் தீர்மானத்தை கொண்டுவர முடியாது என்று ஓபிஎஸ் எச்சரித்தார். இது பொது செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என்று இருந்த எடப்பாடிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனக்கு செல்வாக்கை காட்டும் வகையில் கட்சியினரின் ஆதரவை திரட்டி வருகின்றார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இந்த பிரச்னையில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரை சமாதானப்படுத்த கடந்த 5 நாட்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும் மாறி மாறி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எடப்பாடி தரப்பினர் ஒற்றை தலைமை கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். எடப்பாடியின் புதிய சமரச திட்டத்தால் கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதே போல எடப்பாடியையும் சந்தித்து அதிமுகவில் பல்வேறு அணியினர் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

இன்று காலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி இல்லத்தில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, இணை செயலாளர் டாக்டர் சுனில், துணை செயலாளர் கடலூர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அதிமுக மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். நேற்று ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட செயலாளர் சையத்கான் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

குறிப்பாக தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமர், கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி, முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன், பெரிய குளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி செந்தட்டி காளை, சின்னமனூர் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், ஆண்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பொன்முருகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் அணி மாவட்ட நிர்வாகிகளே எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தது ஓபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை எடப்பாடியை தம்பித்துரை, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி, பொள்ளாட்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஒற்றை தலைமை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒற்றை தலைமையை ஏற்று கொண்டால் ஓபிஎஸ் கேட்கும் பதவி கிடைக்கும். அதாவது, பொருளாளர், அவைத்தலைவர் பதவி வழங்கப்படும். மேலும் அவரது மகனுக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்றும் அப்போது அவர் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதை அவர்களிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸை தம்பித்துரை, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் சந்தித்து எடப்பாடியின் கருத்தை தெரிவித்தனர். அப்போது எடப்பாடி கருத்தை ஓபிஎஸ் ஏற்று கொள்ளவில்லை. இரட்டை தலைமை என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார். இதனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒற்றை தீர்மானத்தை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஒற்றை தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால் சட்டசிக்கல் ஏற்படும்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

அதனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொறுத்தது தான் பொறுத்தோம் இன்னும் 2 ஆண்டுகள் பொறுத்திருப்போம். அதன் பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தானாக காலாவதியாகி விடும். அப்போது பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என்று எடப்பாடி காத்திருக்கிறார்.
இதற்கிடையில் தனக்கு உள்ள ஆதரவை ெபருக்கும் வகையில் நடவடிக்கையை எடப்பாடி முடுக்கி விட்டுள்ளார்.

அதே நேரத்தில் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் எடப்பாடி ஈடுபட தொடங்கியுள்ளார்.  அதிமுக பொதுக்குழுவுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தொண்டர்களும் இபிஎஸ், ஓபிஎஸ் வீடுகளில் திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

EPS 2 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img