8வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெற்ற பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்து யோகாசனம் செய்து பார்வையாளர்களை வியக்க வைத்தார்.


இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி வெள்ளை உடையில் யோகா மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதரமர் மோடி, ஒட்டு மொத்த உலகமும் நமது உடல் மற்றும் ஆன்மாவில் இருந்து தான் தொடங்குகிறது என்றார். உலகம் நம்மிடம் இருந்து தொடங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், யோகா பயிற்சி நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் வேளையில், யோகா தினம் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது என்றும் தெரிவித்தார். யோகா தற்போது உலகம் முழுவதும் பறந்து விரிந்து இருப்பதுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதனை பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார். யோகா வாழ்க்கையின் ஒரு அங்கமாக மட்டுமின்றி, வாழ்க்கை நெறிமுறையாக மாறி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே அனைவரும் யோகாவை அறிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசிய மோடி, ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது. மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது.யோகா மூலம் மில்லியன் கணக்கான மக்கள் உலகளாவிய அமைதியின் சூழலை உருவாக்குவார்கள். யோகா நமக்குள் இருக்கும் அனைத்தையும் நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வு உணர்வை உருவாக்குகிறது இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடம் யோகாவிற்கான தீம் மனித நேயத்துக்கான யோகா என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
