மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று காலை இருவர் உயிரிழந்ததாகவும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 13 பேர். இன்னும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.
காயமடைந்தவர்கள் அனைவரும் கட்கோபர் மற்றும் சியான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாவும் மும்பை ஆணையர் இக்பால் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வாகனங்களும், நவீன கருவிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.