சென்னை ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் உரிய ஆதாரங்கள் இல்லாமல் வைத்திருந்த 4 கிலோ வெள்ளி கட்டிகளை விற்பனை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக கைப்பையுடன் நின்றிருந்த ஒருவரை பிடித்து எஸ்பிளனேடு போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரது பையை சோதனை செய்தனர். அந்த பையில் சுமார் 4 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டி இருந்தது. இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் நடத்திய விசாரணையில் அவர், கும்பகோணம் சிங்காரத்தோப்பை சேர்ந்த செந்தில்செல்வம் ( 45) என்பதும், சாமி சிலைக்கு கிரீடம் செய்வதற்காக வெள்ளிப்பொருட்களை மொத்தமாக ெகாண்டு வந்து சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் அவற்றை உருக்கி வெள்ளி கட்டிகளாக கொண்டு செல்வதாகவும் கூறினார்.
ஆனால் அவரிடம் அந்த வெள்ளி கட்டிக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து சுமார் 4 கிலோ வெள்ளி கட்டியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து விற்பனை வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், வெள்ளிகட்டியை பறிமுதல் செய்து, இது தொடர்பாக செந்தில் செல்வத்திடம் விசாரித்து வருகின்றனர்.