மத வன்முறையை என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: பிரதமர் மோடி

Published:

Narendra_Modi புதுதில்லி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் வன்முறைகள் நடத்தப் படுவதை என் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறினார் பிரதமர் மோடி. தில்லியில் அண்மைக் காலமாக கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தில்லியில் 5 கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் கிறிஸ்தவ பள்ளியின் மீதும் தாக்குதல் நடந்த விவகாரத்தில் இதுவரை அமைதிகாத்தார் பிரதமர் மோடி. அவரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மோடி, எல்லா மதத்தினருக்கும் சமமான மரியாதையை எனது அரசு கொடுக்கும் என்று உறுதி அளித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “முழு சுதந்திரம் உள்ளது என்ற நம்பிக்கையை எனது அரசு உறுதி செய்யும், எல்லோரும் தங்களது சொந்த மதத்திற்கு திரும்பவோ அல்லது புதிய மதத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது கட்டாயம் இல்லாமல் மதத்தை தேர்வு செய்யவோ மறுக்கப்படாத உரிமை உள்ளது என்பதையும் எனது அரசு உறுதி செய்யும். மைனாரிட்டி அல்லது மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த மத குழுக்கள், வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மற்றவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை எனது அரசு அனுமதிக்காது. அனைத்து மதத்திற்கும் அரசு சமமான மரியாதையை வழங்கும். எந்த ஒரு மதத்திற்கு எதிரான வன்முறையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இதுபோன்ற வன்முறைகளுக்கு பெரிதும் கண்டனம் தெரிவிக்கிறேன். இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக எனது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.” என்றார்.

Related articles

Recent articles

spot_img