கேரளா லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது. இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா. இவர் சமீபத்தில் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார். பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தினர். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பினராயி விஜயனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஸ்வப்னா குற்றம் சாட்டினார். மேலும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். இந்த நிலையில் கேரளாவில் நடந்த லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. மீண்டும் தொடங்க உள்ளது. இந்த ஊழல் வழக்கிலும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்வப்னாவுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது. இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.