அதிமுக எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் இன்று காலை அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் திடீரென ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 பேரும் யாருக்கு கட்சியில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் பெரும்பான்மையினரின் ஆதரவு எடப்பாடிக்கு இருந்தது. அவருக்கு 90 சதவீதம் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதே ேநரத்தில் குறைவான அளவிலேயே ஓபிஎஸ்க்கு ஆதரவு இருந்து வந்தது. அதே நேரத்தில் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து பொது செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி அணியினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்றுக்குள் சென்னைக்கு வந்து விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வருவதற்காக பொறுப்புகள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்றுக்குள் சென்னை வர திட்டமிட்டுள்ளனர்.அவர்கள் சென்னையில் தங்கும் வகையில் சென்னையில் ஓட்டல்கள் அதிக அளவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் அனைவரையும் பொதுக்குழுவுக்கு வந்து செல்லும் வரை அவர்களை நன்றாக உபசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி தரப்பில் மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு சுவிட் பாக்ஸ் வரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பொதுக்குழுவின்போது ஓ.பி.எஸ்.அணி மாவட்டச் செயலாளர்களுக்கு 5 ஸ்வீட் பாக்ஸ்களும், எடப்பாடி அணிக்கு 3 ஸ்வீட் பாக்ஸ்களும் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த முறை போல எந்த பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் ‘கியூஆர்’ கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கட்சி ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ளது. 75 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மேஜை போடப்பட்டு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு மதியம் தடபுடல் சைவ உணவுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இது வடை, பாயாசத்துடன் 24 வகையான உணவுகள் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் எப்படியாவது தடை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இதனால், நாளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டியுள்ள பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், இன்று காலை அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.