மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியது. அனைத்து அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
அவ்வப்போது லேசான சாரலுடன் குளுகுளுவென ரம்மியமான சூழல் நிலவுகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி போன்றவற்றில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயனிகள் படையெடுத்தனர். ஐந்தருவி செல்லும் சாலையில் கீழவண்ணமலைக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு விழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி தொடங்கியது.
குளுகுளு இயற்கை சூழலில் படகு சவாரி செய்யவும் பலஆர்வத்துடன் மக்கள் திரண்டனர். குற்றாலத்தில் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத்த திட்டமிடபட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பார்வதிபுரம், சுங்காங்கடை, புத்தேரி, கோணம், பரக்கை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை,குந்தா,கூடலுர் மற்றும் பந்தலுர் பகுதிளில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை நீடிக்கிறது. குறிப்பாக கூடலுர்,பந்தலுர் பகுதியில் தொடரும் கனமழையால் பாண்டியாறு, பொன்னம்புலா மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலுர் அருகே நெடுஞ்சாலையில் பாடந்துறையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் குவிந்திருந்த மண் மூங்கில் ஆகியவற்றை போர்கால அடிபடையில் நெடுஞ்சலைதுறையினர் அகற்றியதும் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.