உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் தரிசிக்க கேரள காவல்துறை மூலம் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இதனால் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். இதனை தவிர்க்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம் என்பதால் பலரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆன்லைன் முன்பதிவை கேரள போலீசார் செயல்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விஷயத்தில் உரிய முடிவை எடுக்கும்படி கேரள அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. இதன்முடிவில் சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டது.
இதற்காக தேவசம் போர்டு சார்பில் சிறப்பு தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கவும் அந்தக் குழுவுக்கு தேவையான உதவிகளை கேரள போலீசார் செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் சமயங்களில் கேரளாவில் 12 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும். அதனையும், பம்பை, நிலக்கல் பகுதிகளில் செயல்படும் உடனடி முன்பதிவு மையங்களையும் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.