அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டசீலை அகற்றக் கோரி இபிஎஸ்,ஓபிஎஸ் இரு தரப்பினரும் முறையீடு செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின்பே விசாரிக்கப்படும் என்று இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஜூலை 11இல் வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி, ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உண்மையான அதிமுக நாங்கள்தான். கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடா்பாக மனு தாக்கல் செய்தால் புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமாா் தெரிவித்தாா்.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமாா், இதுதொடா்பாக புதன்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தாா்.
இதனால் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிய வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரிக்கப்படும். அதாவது தலைமை நீதிபதி ஒப்புதல் பின்பே ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் விசாரிக்கப்படும் என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.