அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கிய
உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் ஜூலை 11-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் மோதிக் கொண்டனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா். மேலும், அலுவலகம் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, ராயப்பேட்டையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்தது.
அத்துடன், தற்போது வரை இருத் தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னை ஏற்படலாம் என்று காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை அறிக்கைக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம் வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
அதிமுக அலுவலகத்துக்கு சீல் ஏன்? வீடியோ ஆதாரங்களுடன் போலீசார் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் டிவியில் காமிச்சதுல 10% கூட உங்க வீடியோவுல இல்லை என நீதிபதி அப்செட் ஆக்கியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 2வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்றது
நீதிபதி: கட்சி அலுவலகத்துக்குள் இருப்பவர்கள் குறித்து போலீசாருக்கு தெரியுமா?
அரசு தரப்பு: கட்சி அலுவலக மேலாளர் முதலில் ஜூலை 10 ஆம் தேதி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். காலை, 6:30 மணிக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கினர். காலை 8 மணிக்கு தான் இபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர்.
நீதிபதி: வன்முறையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
அரசு தரப்பு: நாங்கள் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தோம். காலை 8.45 மணியளவில் இரு தரப்புக்கும் இடையே தகராறு தொடங்கியது. நாங்கள் இரு தரப்பினரையும் தடுக்க முயன்றோம் ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
(இதனை தொடர்ந்து நீதிபதி அதிமுக அலுவலகத்திற்கு முன்பு நடந்த வன்முறை சம்பவ வீடியோவை பார்வையிட்டார்)
நீதிபதி: வன்முறை நடக்கும் போது போலீசார் பார்வையாளர்களாக உள்ளனர். நீங்கள் ஏன் காத்திருந்து அவர்களை அனுமதிக்கிறீர்கள்?
அரசு தரப்பு: காவல்துறையின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்தோம். பொதுமக்கள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.இவ்வளவு நடந்தும் இரண்டு நபர்கள் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
நீதிபதி: போலீசார் தலையிட்டதாக தெரியவில்லை
(இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் காவல்துறை எவ்வாறு செயல்படத் தவறியது என்பதை இந்த வீடியோக்கள் காட்டும் என தெரிவித்தார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் எங்களிடமும் வீடியோவும் உள்ளது என கூறினார்)
நீதிபதி: இந்த வீடியோதான் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா?
அரசு தரப்பு: ஆம்
நீதிபதி: டிவி சேனல்களில் காட்டப்பட்டதில் 10% கூட போலீஸ் வீடியோவில் இல்லை.
அரசு தரப்பு: இனி கட்சி அலுவலகம் தொடர்பாக எந்த சர்ச்சையும் இருக்காது என்பதில் எந்த உறுதியும் இல்லை.
நாங்கள் இதுவரை மூன்று எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளோம். முதல் எப்ஐஆர் இல் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளோம். மேலும் சிசிடிவி அடிப்படையில், ஒவ்வொருவரையும், அவர்கள் யார், என்ன பதவி வகிக்கிறார்கள் என்பதை இப்போது அடையாளம் கண்டுள்ளோம்.
நீதிபதி: பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து எப்போதாவது நஷ்டஈடு அல்லது இழப்பீடு வசூலித்திருக்கிறீர்களா?
காவல் துறை: தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம். சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னைகள் ஏற்படலாம்.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது .காவல்துறை பதில மனுவுக்கு ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பிற்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம் மூன்று தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை இருக்கும் என தெரிகிறது.
