கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலம் தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.
இதில் காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் . மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில், மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ள்ளிட்ட தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளாதகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரம் நிகழ்ந்த பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, உள்துறை செயலளார் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. சின்னசேலத்தில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்து வருகிறது அதிரடிப்படை.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக உளவுத்துறை போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. “ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம்” என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் உளவுத்துறை விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
