
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். சோனியாகாந்தியுடன், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார். காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பிகார் தலைநகர் பாட்னா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு பதிரிகை பங்கு விற்பனை குறித்து ஏற்கனவே ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். அதோடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்; நேஷனல் ஹெரால்டு பற்றிய கனக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நேஷனல் ஹெரால்டு பற்றி வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தை விட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என கூறியுள்ளார்.

இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய தில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.