images 2022 07 29T090845.096 - 2026

கேரளா-குரங்கு அம்மை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மரணம் ..

சற்றுமுன்

குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞரின் மரணத்திற்கான காரணங்கள் ஆராயப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பபட்டது.

அதன் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், அந்த இளைஞர் நேற்று திடீரென உயிரிழந்தார். குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “குரங்கு அம்மை நோயானது, கொரோனா தொற்றை போல் வீரியமிக்கதாகவே அல்லது தொற்று நோயாகவோ இல்லை. ஆனால் அது பரவுகிறது. கொரோனா உயிரிழப்புகளை ஒப்பிடும் போது இதன் இறப்பு வீதம் குறைவாகவே உள்ளது. 22 வயது இளைஞருக்கு உடலில் வேறு எந்த நோயும்,பிற உடல்நல பிரச்சினைகளும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படும்.

அவர் ஜீலை 21-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த பிறகு மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் ஆராயப்படும். இந்த வகை குரங்கு அம்மை நோய் பரவுவதால், அதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த நோய் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் இந்த மாறுபாடு குறித்து எந்த ஆய்வு முடிவுகளும் கிடைக்கவில்லை. எனவே இது குறித்த ஆய்வுகளை கேரளா மேற்கொண்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

images 2022 07 29T090845.096 - 2026

இந்த நிலையில் குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள – தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறியதாவது:- குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை என்பது தெரியவந்தது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள – தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள்.கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பாதிப்புகள் இருந்தால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாதிப்பு வராது எனவும் சொல்ல முடியாது. குரங்கு அம்மை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் நம்மிடமே உள்ளது. இதுவரை குரங்கு அம்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் புனேவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டு, இங்கேயே பரிசோதிக்கப்படுகிறது‌ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.