
இணைந்து செயல்பட ஒ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார் அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார் . நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.இதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கட்சி இனி எப்படி செயல்பட போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தொண்டர்களின் ஆதரவோடும் தமிழக மக்களின் அரவணைப்போடும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்றார் .
இந்த நிலையில் இன்று நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கினோம், அந்தநிலை மீண்டும் தொடர வேண்டும்” கசப்புகளை மறந்து விட்டு அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள். அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். இரட்டை தலைமை என்பதேல்லாம் பிரச்சினை இல்லை. கூட்டு தலைமையாக செயல்படுவோம். இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.என்றார்.
இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இணைந்து செயல்பட ஒ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீது திங்களன்று விசாரணைக்கு வருகிறது.




