
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி மூத்த வக்கீல் இபிஎஸ் சார்பில் அரிமா சுந்தரம் வாதாடினார்.
அவர் வாதாடுகையில், ‘ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வரமாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும்.
அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு. அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க கட்சியில் அதிகாரமில்லை. பொதுக்குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்களை அழைப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டி வரும். எனவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதாடினார். தொடர்ந்து வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. இன்று பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் வாதாடுகிறார்கள்.





