ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது.
பெங்களூரு பல இடங்களில் குளம்போல் மாறிய குடியிருப்புகளில் இருந்து மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஜூன் மாதத்தில் பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதே போல் தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதே போல் கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.