உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச பால்வள கூட்டமைப்பு சார்பில் உலக பால்வள உச்சி மாநாட்டை நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் பால்வள உச்சி மாநாடு செப்டம்பர் 15 வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 50 நாடுகளை சேர்ந்த சுமார் 1,500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து இந்திய விவசாயிகள் தெரிந்துகொள்ள மாநாடு உதவும் என்றார்.
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தித் துறையில் இருந்து வேலைவாய்ப்பை பெறுகின்றன. இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள் தான். உலகின் மற்ற வளர்ந்த நாடுகளை போல அல்லாமல் இந்தியாவில் பால்வளத்துறையின் உந்து சந்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர்.
2025ம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு புருசெல்லா தடுப்பூசி 100 சதவீதம் போடப்படும். கால்நடைகளுக்கு வேகமாகப் பரவிவரும் லம்ப்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.