
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது படலம் தொடர்ந்துள்ள நிலையில்
பாஜக அலுவலகம் முன்பு பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சித்தாபுதூரில் பாஜக அலுவலகத்தின் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றதைப் பார்த்த அலுவலகத்தின் முன்பு நின்றிருந்த சிலர், அவர்களை பிடிக்க முற்பட்டும் தப்பிச் சென்றனர்.
இதையறிந்த பாஜகவினர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு திரண்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும், பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தும் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று கோவை ஒப்பனகார வீதியிலும் துணிக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு இடங்களிலும் பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும், பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
