விருதுநகர் அருகே 4 வழிச் சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மௌலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டியுள்ளார்.
விருதுநகர்-சாத்தூர் இடையே 4 வழிச் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே சென்ற போதுது, கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி, அவரது மகன் மௌலி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கண்ணன், கார் ஓட்டுநர் குணசேகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்களை, அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
