
தமிழக காவல்துறை அரசியல்வாதிகளின் அடிமைகளாக ஆர்டர்லியாக செயல்படுகிறது- என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய இந்து வியாபாரிகள் கடன் வாங்கி , முதல் போட்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்..
ஏற்கனவே கொரோனா போன்ற தொற்று காரணமாக இந்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடங்கியிருந்த சூழலில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையையே பெரிதும் நம்பி உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரத்தின் மூலம் மட்டுமே இந்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது..
இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் நலிவடைந்த இந்து வியாபாரிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்து கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம் என்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இந்து முன்னணி பேரியக்கத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி அவர்களை காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது…
உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்திய திருநாட்டில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் அடிப்படை உரிமை இந்திய அரசியல் சாசன சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது…
ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்து விரோத போக்கை தொடர்ந்து செய்து வருகிறது. இந்துக்களுக்காக குரல் கொடுத்தால் கடுமையான சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்வதும் சிறையில் அடைப்பதும் திமுகவின் தமிழக அரசிற்கு அன்றாட வேலையாகிப் போனது..
இந்துக்களுக்கு எதிராகவும் இந்து கடவுளுக்கு எதிராகவும் ஆபாசமாகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் திமுகவினரும் சிறுபான்மையினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத காவல்துறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல செயல்படுகிறது..
புலனாய்விலும் குற்றங்களை தடுப்பதிலும் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்று திராவிட மாடல் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக மாறியிருப்பது வேதனை தரக்கூடியதாக உள்ளது.
அதிலும் இந்து முன்னணி நிகழ்ச்சிகளை தடுப்பதற்கும் நிர்வாகிகளை கைது செய்வதற்கும் மட்டுமே தமிழக காவல்துறையினருக்கு சிறப்பு படி ஏதும் தருகிறார்களோ என்னவோ?
நீதிமன்றமே கண்டித்த பிறகு ஆர்டர்லி முறையை ஒழித்ததாக தமிழக காவல்துறை தலைவர் தெரிவிக்கிறார் ஆனால் காவல்துறை அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுகவினருக்கு அரசியல் ஆர்டர்லியாக செயல்படுகிறது என்பது எல்லாரும் அறிந்த உண்மை…
மேலும் இந்து விரோத போக்கினாலும் இந்து நம்பிக்கையை சிதைப்பதினாலும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடிப்பதாலும் இந்து முன்னணி வேலையை கடுகளவும் தடுத்திட முடியாது என்பதை காவல்துறை உணர வேண்டும்…
இனியும் இந்து விரோத போக்கு தொடர்ந்தால் மக்கள் திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிவார்கள்… என்று தெரிவித்துள்ளார்.