
நவ 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. சென்னையில் 36 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பெய்து சாலைகள் மற்றும் தெரு வீதிகளில் வெள்ளமாக ஓடியது.
சென்னை நகரம் முழுவதும் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டதன் மூலம் மழை நீர் உடனடியாக வடிந்ததால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகவில்லை. இதையும் படியுங்கள்: புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு விட்டு விட்டு கனமழை பெய்ததால் மழை தேங்கிய பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு உடனுக்குடன் அப்புறப்படுத்தினார்கள். மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகவில்லை. ஆனாலும் மழைநீர் தேங்கிய சில பகுதிகளில் அதிகாரிகள் அதனை அகற்றும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை மேலும் வலுவடைவதை தொடர்ந்து சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மழைநீர் கால்வாய் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில தாழ்வான பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கி நின்றதால் அதை ஆய்வு செய்து அதற்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அல்லது நாளை காலைக்குள் உருவாகும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக நாளை (10-ந்தேதி) முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிறது. இது 10, 11-ந்தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ 11, 12, 13-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேலும் இன்று முதல் 12-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடையும் என்பதால் மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். மழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் மீண்டும் மழை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி செய்துள்ளது.
24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையும், உதவி மையங்களும் மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.