கேரள அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் தன்னை உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடந்ததாக சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார் .
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய முதல் மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர் அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிவந்தார்.
இந்த நிலையில் சரிதா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறினர். இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டவை.
உடலில் இவை கலந்தால் நான் மெதுவாக இறந்து விடுவேன். இதற்காகவே எனக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. மெல்ல கொல்லும் தன்மை கொண்ட விஷம் உணவு மூலம் எனக்கு தரப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனையில் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. அவ்வப்போது நான் குடிக்கும் பழச்சாறு, குளிர்பானம் மற்றும் உணவுபொருளில் இதனை கலந்து எனக்கு கொடுத்துள்ளனர். இதனை யார் கலந்து கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது.
சமீபத்தில் நான் திருவனந்தபுரம் சென்றபோது வழியில் ஒரு கடையில் பழச்சாறு குடித்தேன். அதனை எனது டிரைவர் வினுகுமார் வாங்கி வந்து தந்தார். அப்போது அவர் பழச்சாறில் எதையோ கலக்குவதை பார்த்தேன். அப்போதுதான் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை நான் பணியில் இருந்து நீக்கிவிட்டேன். கடந்த 2018-ம் ஆண்டு நான் அரசியல் பிரமுகர்கள் சிலர் மீது பாலியல் புகார் கொடுத்தேன். அவர்கள் என்னை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அவர்களுடன் சேர்ந்துதான் டிரைவர் வினுகுமார் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன்.என கூறியுள்ளார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.